காதல் கணவருக்கு தனது சிறுநீரகத்தை தானம் அளித்ததன் மூலம் அவரை சர்வதேசப் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்லச் செய்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்.
நடுத்தரக் குடும்பம். நல்ல கல்வி. ஐ.டி. நிறுவனத்தில் வேலை. ஐ.டி. நிறுவனத்திலேயே பணியாற்றும் பெண்ணை காதலிக்கும் வாய்ப்பு. காதலித்த பெண்ணுடன் பெற்றோர் சம்மதத்தில் திருமணம். இப்படியாய் மகிழ்ச்சிக் கடலில் நீந்தித் திளைத்தார் ஆர். ஹரிகுமார் (28).
ஆனால் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே இடி விழுந்ததுபோல அதிர்ச்சி தரும் செய்தி.
உடல் நலம் சற்று பாதித்த நிலையில் மருத்துவமனைக்குச் சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவர் ஹரிகுமாரின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாகக் கூறினார்.
சிறுநீரகம் கிடைப்பது கடினம்
“அவ்வப்போது தலைவலி, தலைச்சுற்றல் ஏற்படும். பணிச் சுமையே காரணம் என நினைத்து அலட்சியமாக இருந்து விட்டேன். ஆனால் எனக்குள் இருந்த ரத்த அழுத்தப் பிரச்னை எனது சிறுநீரகங்களின் செயல்பாட்டை முடக்கி விட்டது என்பதை பிறகுதான் உணர்ந்து கொண்டேன். அதன் பின்னர் ஏராளமான மருத்துவர்கள், பலவித சிகிச்சைகள் என அலைந்தேன். எவ்வித முன்னேற்றம் இல்லை. இறுதியில் நண்பர் ஒருவர் கூறியதன் பேரில் சேபியன்ஸ் அறக்கட்டளையைச் சேர்ந்த டாக்டர் ராஜன் ரவிச்சந்திரனை சந்தித்த பிறகுதான் நம்பிக்கை ஏற்பட்டது.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வது என முடிவாயிற்று. ஆனால் சிறுநீரகம் கிடைப்பது எளிதாக இல்லை. இறுதியில் எனது மனைவி சரண்யாவே தனது ஒரு சிறுநீரகத்தை தானமாகத் தந்து என்னைக் காப்பாற்றியுள்ளார்” என்றார் ஹரிகுமார்.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் பங்கேற்கும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரில் கடந்த ஜூலை 29-ம் தேதிமுதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை நடைபெற்றது. அதில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட ஹரிகுமார், வட்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று, நம் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
“நம் குடும்பத்தில் ஒருவர் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படும் போது, குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் சிறுநீரகம் தானம் அளிப்பதே சிறந்தது” என தனது அனுபவத்தின் மூலம் கூறுகிறார் ஹரிகுமார் மனைவி சரண்யா (25).
உறுப்பு தான விழிப்புணர்வு குறைவு
“இன்று சிறுநீரக நோயாளிகள் சிறுநீரகங்களைத் தானமாகப் பெற இரண்டு வழிகள்தான் உள்ளன. ஒன்று குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் தானமாகத் தர வேண்டும். இல்லையெனில் விபத்துகளின் காரணமாக மூளைச்சாவு ஏற்பட்டோரின் சிறுநீரகங்கள் தானமாகப் பெறப்பட வேண்டும். எனினும் மூளைச்சாவு ஏற்பட்டோரின் உறுப்புகளை தானம் அளிப்பதற்கான விழிப்புணர்வு நம் நாட்டில் மிகவும் குறைவாகவே உள்ளது. ஆகவே, குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் தானமாக அளிப்பதன் மூலம் விரைவான சிகிச்சை கிடைப்பதோடு விரைவில் நலம் பெறவும் முடியும். நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருப்பவர்கள் சிறுநீரகம் தானம் அளிப்பதால் அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. எனது ஒரு சிறுநீரகத்தை எனது கணவருக்கு தானம் அளித்த நிலையில், மற்றவர்களைப் போல நானும் மிகவும் ஆரோக்கியமாகவே உள்ளேன்” என்கிறார் சரண்யா.
சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படும் மற்றவர்களுக்கு கூற விரும்புவது என்ன என ஹரிகுமாரிடம் கேட்டோம். “நல்ல ஆலோசனை தரும் மருத்துவரை விரைவாக அடையாளம் காண வேண்டும். எந்த வகையில் சிறுநீரகத்தை தானமாகப் பெறப் போகிறோம் என்பதையும் உடனடியாக முடிவு செய்ய வேண்டும். அதே நேரத்தில் சிகிச்சைக்கு தேவையான பணத்தையும் ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம் நம்மால் விரைவில் சிகிச்சை பெற முடியும். இது தொடர்பாக யாரேனும் என்னுடைய 97911 98017 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு கொண்டால் எனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளேன்” என்றார் ஹரிகுமார்.