.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday 31 October 2013

இரவில் பேய்கள் என்னைமட்டும் துரத்தி ஓடிவந்தன!

கதை சொல்ல நச்சரித்தது
 
குழந்தை.
 
பேய்க்கதை சொல்லத்துவங்கினேன்.
 
அனைவரும் உறங்கிவிட்ட
 
ஓர் இரவில் பேய்கள் என்னைமட்டும்
 
துரத்தி ஓடிவந்தன என்று
 
தொடங்கினேன்.
 
பேய்க்குத்தான் கால்கள் இல்லையே
 
பின்னெப்படி ஓடிவரும் என்றது
 
குழந்தை.
 
உறங்கிவிட்ட பாவனையில்
 
கண்மூடிக்கிடந்தேன் நான்.

குழந்தை!


அப்பாவும் அம்மாவும்
 
தராத அரவணைப்பை
 
பொம்மைக்கு தந்தபடி
 
உறங்கிக்கொண்டிருந்தது குழந்தை.
 
கனவில் தோன்றிய கடவுள்கள்
 
அச்சிறு குழந்தையின் அரவணைப்பை
 
வரமாய் கேட்டனர்.
 
வரிசையில் நின்றிருந்த
 
கடவுள்களுக்கு உறக்கப்புன்னகையை
 
தந்துவிட்டு பொம்மையை
 
இறுக்கி அணைத்துக்கொண்டதது.
 
பொம்மையாதலின் வழிமுறைகள்
 
அறியாமல் விழித்தபடிநின்றனர்
 
கடவுள்கள்.

கவிஞர் வைரமுத்து பாடிய அசத்தல் தாலாட்டு!


வேலைக்குப்போகும் பெண் குழந்தைக்குத் தாலாட்டினால் எப்படி இருக்கும்?
என்ன சொல்லித் தாலாட்டுவாள்?




சோலைக்குப் பிறந்தவளே!
சுத்தமுள்ள தாமரையே!
வேலைக்குப் போகின்றேன்
வெண்ணிலவே கண்ணுறங்கு!
அலுவலகம் விட்டு
அம்மா வரும்வரைக்கும்
கேசட்டில் தாலாட்டு
கேட்டபடி கண்ணுறங்கு
ஒருமணிக்கு ஒருபாடல்
ஒலிபரப்பும் வானொலியில்
விளம்பரங்கள் மத்தியிலே
விழிசாத்தி நீயுறங்கு!
ஒன்பது மணியானால்
உன் அப்பா சொந்தமில்லை
ஒன்பது முப்பதுக்கு
உன் அம்மா சொந்தமில்லை
ஆயாவும் தொலைக்காட்சி
அசதியிலே தூங்கிவிட்டால்
தூக்கத்தைத் தவிர
துணைக்கு வர யாருமில்லை
இருபதாம் நூற்றாண்டில்
என் கருவில் வந்தவளே!
இதுதான் கதியென்று
இன்னமுதே கண்ணுறங்கு!
பேருந்தில் நசுங்கிப்
பிதுங்குகின்ற வேளையிலும்
எடைகொஞ்சம் இழந்து
இறங்குகின்ற வேளையிலும்
கோப்புக்குள் மூழ்கி
குடியிருக்கும் வேளையிலும்
பூப்பூவாய் உனது முகம்
புறப்பட்டு வரும் கண்ணே!
தந்தை வந்து கொஞ்சுவதாய்
தாய் மடியில் தூங்குவதாய்
கண்ணான கண்மணியே
கனவுகண்டு நீயுறங்கு!
புட்டிப்பால் குறையவில்லை
பொம்மைக்கும் பஞ்சமில்லை
தாய்ப்பாலும் தாயுமின்றி
தங்கம் உனக்கென்ன குறை?
மாலையில் ஓடிவந்து
மல்லிகையே உனையணைத்தால்
சுரக்காத மார்பும்
சுரக்குமடி கண்ணுறங்கு
தாலாட்டுப் பாட்டில்
தளிரே நீ தூங்கிவிட்டால்
கோலாட்டம் ஆட
கொண்டவர்க்கு ஆசைவரும்!
உறவுக்குத் தடையாக
ஓவென்று அலறாமல்
இரவுக்கு மிச்சம் வைத்து
இப்போது நீயுறங்கு
தாயென்று காட்டுதற்கும்
தழுவி எடுப்பதற்கும்
ஞாயிற்றுக் கிழமைவரும்
நல்லவளே! கண்ணுறங்கு!
*************

காப்புறுதிக்கும் காப்புறுதி!

நாங்க,
திரவியம் தேடப்
போன கதை,
தேடிய திரவியம்
போன கதை
தெரியச் சொல்றேன்
கேளுங்கையா!
பிள்ளைகள் மறந்து
பெற்றோர் துறந்து
பெருசாய் ஒழைச்சோம்
பணத்தைச் செய்ய!
வீட்டை மறந்து
ஒழைச்ச தெல்லாம்
வீணாய்ப் போச்சே
என்ன செய்ய?
சிறுகச் சிறுகச்
சேத்த பணம்
பெருகக் கண்டது
பேதை மனம் – அதப்
பெருக்க நெனச்சது
தப்பு இல்ல! – இப்பப்
பெருவாறாய்
இழந்து நிக்கிது
என்ன செய்ய?
சீட்டுக் கம்பெனியில்
போட்டு வைத்தால்
சீக்கிரம் பணமும்
பெருகுமென்றார்! – அவர்
போட்ட பணத்தைச்
சுருட்டிக் கொண்டு
ஓட்டமெடுத்த
கதையறிவீர்!
பங்குச் சந்தையில்
போட்டுவைத்தால்
பத்தாய் நுìறாய்ப்
பெருகுமென்றார்!
பங்குச்சந்தைகள்
விழுந்து போச்சு!
பாதிப்பு ரொம்பத்தான்
ஆயிப்போச்சு!
நிலையில்லா வாழ்க்கையிலே
நிம்மதியாய் இருப்பதற்கே
வழிமறித்து
வழிசொன்னார் ஒருமுகவர்!
ஆருயிருக்கும் காப்புறுதி
ஆபத்துக்கும் காப்புறுதி
வீட்டின் பேரிலும் காப்புறுதி
விளையும் பொருளுக்கும் காப்புறுதி
பட்டியல் பலவாறாய்ப்
போட்டுக் காட்டி
பாலிசி பலப்பல
எடுக்கச் சொன்னார்!
காப்புறுதிக்கும் காப்புறுதி
கண்டால் எனக்குச்
சொல்லிடுவீர்!
மஞ்சக் கடுதாசி
காட்டி விட்டு
மாயாவியாய்க் கம்பெனிகள்
மறைகின்றன இன்னாளில்!
வங்கியில் போட்டால்
வளரும் என்றார்
வட்டியும் குட்டி
போடு மென்றார்
வட்டி விகிதம்
கொறஞ்சு போச்சு
வாக்கில் நாணயம்
தவறிப் போச்சு!
வங்கியே பத்திரம்
என்பதெல்லாம்
மாறிப்போச்சு
என்ன செய்ய?
வீட்டிலே பெட்டகம்
வாங்கி வச்சு
பூட்டி வைக்கலாம்
பணத்தை என்றால்
பூட்டை உடைக்கும்
திருடன் வந்தால்
பூராப் பணமும்
கொள்ளை போகும்!
வாழ்க்கையைத் தொலைச்சு
பணத்தைத் தேடியது
போதுமையா!
ஓரளவு ஒழைச்சி
ஒசத்தியாய் வாழப்
பழகிகிட்டா
ஒன்னும் பெரிசாத்
தப்பு இல்ல!
மகிழ்ச்சி என்பது
பணத்தில் இல்ல!
அனுவிச்சி வாழ்ந்தா
அது தப்பு இல்ல!
‘அன்பிலே முதலீடு
செய்திருந்தால்
ஆபத்திதுபோல்
வந்திடுமோ?’ – என்று
எண்ணத் துணியுது
இன்று மனம்
தேவைக்கிப் போக
மீதிப்பணம்
ஏழைங்க வாழ
உதவி செஞ்சா
ஏறும் புண்ணியம்
நம் கணக்கில்
ஏறுமா இது
நம் அறிவில்?
***********

கவிதைப்பெண்!

பெண்கள்
 
ஆண்களைவிடக் கவிதைக்கு
 
அதிகம் நெருக்கமானவர்கள்
 
காரணம்
 
பெண்களைப் போலவே
 
கவிதையும் மென்மையானது

பெண்களைப் போலவே
 
கவிதைக்கும் நாணமுண்டு
 
கவிதையும்
 
எதையும் மறைத்தே சொல்கிறது

கவிதையைப் போலவே
 
பெண்களும்
 
ஆழமானவர்கள் ;
 
சித்தர் பாடல்களைப்போல்
 
அவர்களைச் சீக்கிரமாகப் புரிந்து
 
கொள்ள முடியாது ;
 
சில புதுக் கவிதைகளைப்போல
 
கொஞ்சம் போராடினால்தான்
 
புரிந்து கொள்ள முடியும்

அளந்து அளந்து
 
பெண்கள் அடியெடுத்து
 
வைப்பது போலவே
 
கவிதையும்
 
அடியெடுத்து வைக்கிறது

பெண்கள் தங்களை
 
அலங்காரம் செய்து கொள்வதைப் போலவே
 
கவிதையும்
 
சொல்லணி, உவமையணிகளால்
 
தன்னை
 
அலங்காரம் செய்து கொள்கிறது

ஆண்களைவிடப் பெண்கள்
 
கவிதைக்கு
 
அதிகம் நெருக்கமானவர்கள்
 
***************

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top