.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 9 September 2013

மூத்த குடிமக்களை பாதுகாக்க 10 அம்ச திட்டம: மத்திய அரசு வெளியீடு!



அண்மை காலமாக வீடுகளில் தனியாக இருக்கும் முதியோர்கள் குறி வைத்து தாக்கப்படுகின்றனர். அவர்களின் இயலாமையை பயன்படுத்திக் கொள்ளும் கயவர்கள் முதியோரை தாக்கி பொருட்களை கொள்ளையடித்துச் செல்கின்றனர். பல சமயங்களில் மூத்த குடிமக்கள் கொடூரமாக கொலையும் செய்யப்படுகின்றனர். இதையடுத்து”முதியோர் மிகவும் முக்கியமாக பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்’ என தெரிவித்துள்ள மத்திய அரசு அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ள ஒரு கடிதத்தில் 10 அம்சங்களைத் தெரிவித்து அவற்றை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.

sep 9senior citizen-- 2
 


மத்திய அரசு தெரிவித்துள்ள திட்டங்கள்:::

*முதியோர் வாழும் பகுதிக்கு ஏற்ப அவர்களின் பாதுகாப்பு குறித்து சரியான திட்டமிடல் அவசியம். இப்போது மட்டுமின்றி, எதிர்காலத்திலும் முதியோர் சந்திக்க உள்ள சவால்கள், அச்சுறுத்தல்கள் என்ன என்பது குறித்து திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும். அதில் ஒவ்வொரு பகுதியிலும் எத்தனை முதியோர் உள்ளனர்; அவர்களில் எத்தனை பேர், துணையின்றி தனிமையாக உள்ளனர் என்பதை கணக்கிட வேண்டும்.

*அந்தந்த மாவட்ட போலீஸ் தலைமையகங்கள், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஒவ்வொரு போலீஸ் நிலையத்திற்கும் தகவல் அனுப்பி முதியோருக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும்.

*வழங்கப்படும் போலீஸ் பாதுகாப்பு, போதுமானதாக இருக்கிறதா என்பதை குறிப்பிட்ட கால இடைவெளியில் சரிபார்க்க வேண்டும். முதியோர் வசிக்கும் பகுதியில் போலீஸ் ரோந்து அதிகரிப்பது அவசியம்.

*முதியோர் எண்ணிக்கை, அவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு போன்ற தகவல் தொகுப்பு பராமரிக்கப்பட்டு அவ்வப்போது மூத்த அதிகாரிகள் முன்னிலையில் அவை மேம்படுத்தப்பட வேண்டும்.

*குறிப்பாக செல்வந்தர் குடும்பங்களைச் சேர்ந்த முதியோர் வசிப்பிடங்களில் கண்காணிப்பு மற்றும் ரோந்து அதிகமாக இருக்க வேண்டும். அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் எண்ணிக்கை, அவர்கள் யார், யார், வெளியே இருந்து எத்தனை பேர் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அத்தகைய வேலையாட்களின் குற்ற பின்னணி போன்ற தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும்.

*அந்த வேலையாட்களை யாராவது ஒருவர் அல்லது அமைப்பு பரிந்துரை செய்திருக்க வேண்டும். தவறு ஏற்படுமானால், அந்த நபர் அல்லது அவரை பரிந்துரை செய்த நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும்.

*இந்த ஏற்பாடுகளை போலீஸ் துறையின் மூத்த அதிகாரிகள், அவ்வப்போது கண்காணித்து, தேவைப்படின் கூடுதல் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அவர்கள் நேரடியாக முதியோருடன் கலந்துரையாட வேண்டும்.

*மேலும் அரசு மற்றும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களும் இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்தி முதியோர் பாதுகாப்பிற்கு தேவையான அறிவுரைகளை வழங்க வேண்டும்.

*விற்பனை பிரதிநிதிகள்,வீடு வீடாகச் சென்று பொருட்களை விற்பவர்கள் போன்றவர்கள், எளிதில் முதியோரை அணுகா வண்ணமும், முதியோரை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது குற்றவாளிகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வகையிலான செயல்கள் தடை செய்ய வேண்டும்.

*போலீஸ் அதிகாரிகளுடன் இணைந்து பொதுமக்களும், முதியோர் பாதுகாப்பிற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.”என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top