சூப்பர் ஸ்டார் ரஜினி தன் பால்ய பருவத்தில் பெங்களூரில் உள்ள கவிபுரம் அரசு பள்ளியில் படித்தார். அப்போது அவருக்கு கன்னடம், ஆங்கிலம், அறிவியல் பாடங்களை சொல்லிக் கொடுத்தவர் சாந்தம்மா என்ற ஆசிரியை. தற்போது 78 வயதாகும் சாந்தம்மா தனது கணவருடன் ஜலஹள்ளி பகுதியில் வசித்து வருகிறார். வருமானம் எதுவும் இன்றி வறுமையில் சிறு குடிசையில் அந்த முதிய தம்பதிகள் வசித்து வருவது பற்றி ரஜினிக்கு தகவல் கிடைத்தது. அதனால் ரஜினி அவர்களை நேரில் சந்திக்க விரும்பினார். கோச்சடையான் படப் பணிகளில் பிசியாக இருப்பதால் அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை.
சமீபத்தில் ஆசிரியர் தினவிழா வந்தபோது திடீரென ரஜினிக்கு இது நினைவுக்கு வந்திருக்கிறது. உடனே தனது உதவியாளரை அழைத்து "சாந்தம்மாவை மீட் பண்றது மிஸ்சாகிட்டே போவுதுல்ல... அவுங்களோட பேங் அக்கவுணட் நம்பரை வாங்கி அவுங்களுக்கு எவ்ளோ பணம் வேணும்னு கேட்டு அதை அவுங்க கணக்குல டெபாசிட் பண்ணிடுங்க. நான் அடுத்த முறை பெங்களூர் வரும்போது அவுங்களை மீட் பண்றதா சொல்லிடுங்க" என்று கூறியிருக்கிறார்.
இதையொட்டி பெங்களூரில் உள்ள ரஜினி மன்ற தலைவர் ரஜினி முருகனை அழைத்து விசயத்தை சொன்னார் உதவியாளர். அவரும் சாந்தம்மா வீட்டுக்கு சென்று சந்தித்திருக்கிறார். அவர்கள் கேட்ட மூன்று லட்சம் ரூபாயை உடனே அவர்களது வங்கி கணக்கில் செலுத்தினார் ரஜினியின் உதவியாளர்.
"சிவாஜிராவுக்கு நான் 5 முதல் 7ம் வகுப்பு வரை பாடம் நடத்தினேன். அப்போ அவன் குடும்பம் ரொம்ப கஷ்டத்தில் இருந்தது. அதை வகுப்பில் காட்டிக் கொள்ளாமல் படிப்பான். படிப்பு நேரம் தவிர மற்ற நேரங்களில் நிறைய சேட்டை பண்ணுவான். அவனோட கையெழுத்து நல்லா இருக்கும். அப்பவே இவனோட தலையெழுத்தும் நல்லா இருக்கும்னு நினைப்பேன். அதுமாதிரியே அவன் யாரும் நினைச்சு பார்க்க முடியாத உசரத்துல இருக்கான். நான் எவ்வளவு கேட்டாலும் தருகிற நிலைமையில் அவன் இருந்தாலும் எனக்கு என்ன தேவையோ அதைக் கேட்டேன் கொடுத்திருக்கான். மவராசன் இன்னும் நல்லா இருக்கணும். ஆண்டவன் அவனுக்கு நீண்ட ஆயுள கொடுக்கணும்" என்ற நெகிழ்ந்திருக்கிறார் சாந்தம்மா.