சமீபத்தில் வெளியாகி உலகையே பயமுறுத்திக் கொண்டிருக்கும் படம் தி கான்ஜுரிங். நீண்ட நாட்களுக்கு பிறகு வந்திருக்கும் பயங்கரமான திகில் படம். அதிக ரத்தம், கொலை இல்லாமல் வெறும் காட்சி அமைப்புகள், பின்னணி இசை மூலமே மிரட்டியிருக்கிறார்களாம். வழக்கமான பேய்பட கதைதான். ஒரு பழைய வீட்டுக்கு புதிதாக குடிபோகிறது ஒரு குடும்பம். அந்த வீட்டுக்குள் இருக்கும் தீயசக்தி அவர்களை எப்படி ஆட்டிப்படைக்கிறது. அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்கிற கதை. ஜேம்ஸ் வான் டைரக்ட் செய்திருக்கிறார். வேரா பார்மிங்கா, பேட்ரிக் வில்சன் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தை பார்துவிட்டு ரஜினி மகள் ஐஸ்வர்யா நான் இரண்டு நாள் இரவில் வீட்டைவிட்டே வெளியில் வர பயந்தேன். இரவில் தூக்கம் இல்லாமல் தவித்தேன் என்று டூவிட்டரில் எழுத ஏகத்துக்கு படம் எகிறிவிட்டது. சென்னை மால் தியேட்டர்களில ஒரு வாரத்துக்கு ஹவுஸ்புல்லாகி இருக்கிறது.
ஆரம்பத்தில் சாதாரண திகில் படம்தானே என்று ரிலீஸ் பண்ணியவர்கள், இப்போது படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பார்த்துவிட்டு தமிழில் வேகவேகமாக டப் செய்து கொண்டிருக்கிறார்கள். விரைவில் தமிழில் ரிலீசாக இருக்கிறது. எல்லோரும் பயப்பட தயாராக இருங்கள்.