ரஜினியின் கோச்சடையான் படத்தின் முதல் டீசர் வெளியானது. எந்திரன் படத்திற்கு பிறகு, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் கோச்சடையான். அவரது இளைய மகள் சவுந்தர்யா இப்படத்தின் மூலம் இயக்குநராக அவதரித்துள்ளார். ரஜினி இரட்டை வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் ஹீரோயினாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். இவர் தவிர சரத்குமார், ஆதி, ஜாக்கி ஷெரப், நாசர், ஷோபனா, ருக்மணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மீடியா ஒன் குளாபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது.
அனிமேஷன் படமாக அவதார், டின் டின் போன்ற ஹாலிவுட் படங்களின் பாணியில் மோசன் கேப்ட்சரிங் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள முதல் இந்திய 3டி திரைப்படம் இதுவாகும். இப்படத்தின் முதல் டிரைலரை சமீபத்தில் நடந்த கேனன்ஸ் திரைப்பட விழாவில் பிரம்மாண்டமாக வெளியிட இருந்தார்கள். ஆனால் சில காரணங்களால் அது முடியவில்லை. இந்நிலையில் கடந்தவாரம், கோச்சடையான் படத்தின் முதல் டீசர் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்படும் என செளந்தர்யா கூறியிருந்தார். அதன்படி இன்று(செப்.,9ம் தேதி) முதல் டீசரை இணையளத்தில் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி டீசரில், நிறைய ஹீரோக்கள் இருக்கலாம், நிறைய சூப்பர் ஹீரோக்கள் இருக்கலாம், ஆனால் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் மட்டும் தான் என்ற அடைமொழியுடன் ஒரு பெரிய கோட்டை சுவரின் கதவை உடைத்து கொண்டு வருகிறார் ரஜினி. ரசிகர்கள், இதுவரை பார்த்திராத ரஜினியாக முற்றிலும் வித்தியாசமாக வருகிறார் இந்த கோச்சடையான்.
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக ரசிகர்களுக்கு கோச்சடையான் படத்தின் முதல் டீசரை வெளியிட்டு இருக்கிறோம் என்று படத்தின் இயக்குநர் செளந்தர்யா தனது டுவிட்டரில் கூறியிருக்கிறார். மேலும் படத்தின் ஆடியோ ரிலீஸ் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று டிரைலரில் கூறப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், கன்னடம், ஜப்பான் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் கோச்சடையான் படம் வெளியாக இருக்கிறது. தீபாவளி அல்லது டிசம்பரில் கோச்சடையான் படம் வெளியாகும் என தெரிகிறது.