.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 7 September 2013

‘அம்மா’ மினரல் குடிநீர் 15–ந்தேதி அறிமுகம்!


மக்களின் அத்தியாவசிய தேவைகளில் முக்கியமானது குடிநீர். பல இடங்களில் குடிநீர் சுத்தமாக இல்லாத காரணத்தால் ‘மினரல் வாட்டர்’ வாங்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து விட்டது.கடைகளில் 1 லிட்டர் மினரல் வாட்டர் ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது. பாக்கெட் மினரல் வாட்டர் ரூ.1 முதல் 1.50 வரை புழக்கத்தில் உள்ளது.
ரெயில்களில் 1 லிட்டர் மினரல் வாட்டர் (ரெயில் நீர்) ரூ.15–க்கு விற்பனை செய்யப்படுகிறது.


மினரல் வாட்டர் விலை அதிகமாக இருப்பதால் குறைந்த விலையில் தரமான குடிநீர் வழங்க முதல்– அமைச்சர் ஜெயலலிதா திட்டமிட்டார்.இதையொட்டி ஏழை எளிய மக்கள் நலனை கருத்தில் கொண்டு குறைந்த விலையில் பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ‘அம்மா மினரல் வாட்டர்’ உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த ஜூன் மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.


IND1674A.JPG

 


இதை செயல்படுத்தும் வகையில், முதற்கட்டமாக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தினமும் 3 லட்சம் லிட்டர் மினரல் வாட்டர் குடிநீர் தயாரிக்கும் வகையில் ‘அம்மா மினரல் வாட்டர் உற்பத்தி நிலையம் அமைக்கவும், இங்கு உற்பத்தி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டு 1 லிட்டர் பாட்டில் குடிநீர் 10 ரூபாய்க்கு விற்கப்படும் என்றும் இவை அரசு பஸ்களிலும், சென்னையில் உள்ள பஸ் நிலையங்களிலும், மாவட்டங்களில் உள்ள புறநகர் பஸ் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும் என்றும் அறிவித்தார்.

இந்த ‘அம்மா மினரல் வாட்டர்’ உற்பத்தி நிலையம் பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான வருகிற 15–ந்தேதி துவங்கப்பட்டு அன்றைய தினமே மினரல் வாட்டர் விற்பனையும் நடை முறைக்கு வரும் என்றும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

இதையொட்டி கும்மிடிப்பூண்டியில் அம்மா மினரல் வாட்டர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மினரல் வாட்டர் தயாரிப்பதற்கு தேவையான இயந்திரங்கள் சாலை போக்குவரத்து நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

வருகிற 15–ந்தேதி முதல்– அமைச்சர் ஜெயலலிதா இந்த திட்டத்தை தொடங்கி வைத்து மினரல் வாட்டர் விற்பனையை அறிமுகம் செய்கிறார்.எனவே 15–ந்தேதியில் இருந்து பஸ் நிலையங்கள், ஓட்டல்கள், அரசு விரைவு பஸ்கள் நீண்ட தூர பஸ்களில் ‘அம்மா மினரல் வாட்டர்’ 1 லிட்டர் பாட்டில் 10 ரூபாய்க்கு வழங்கப்படும். இந்த திட்டம் பஸ் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.அடுத்த கட்டமாக மேலும் 9 ஊர்களில் அம்மா மினரல் வாட்டர் உற்பத்தி நிலையங்கள் அமைக்கவும் சாலை போக்குவரத்து நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top