பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 2016ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்குப் பின்பு ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக ஜமைக்காவின் உசைன் போல்ட் அறிவித்துள்ளார்.
உலகின் அதிவேக மனிதர் என்றழைக்கப்படும் போல்ட், களத்தில் மின்னல் வேகத்தில் இலக்கைக் கடந்து பதக்கங்களை குவித்து வருபவர். இவர், களத்தில் இருக்கும் வரை மற்றவர்கள் பதக்கம் வெல்வது இயலாது என்ற சூழல் தற்போது நிலவி வருகிறது.
இந்நிலையில், 2016 ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு தனது ஓய்வு குறித்து பரிசீலிக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ரியோ ஒலிம்பிக் போட்டியில் அதிக தங்கப் பதக்கங்களை வெல்ல வேண்டும். 200 மீற்றர் ஓட்டப் பந்தயப் போட்டியில் மீண்டும் உலக சாதனை படைக்க வேண்டும்.
காமன்வெல்த் விளையாட்டிலும் தங்கம் வெல்ல வேண்டும். அதற்குப் பிறகு ஓய்வு பெறுவது குறித்து பரிசீலிப்பேன் என்றும் விளையாட்டில் உச்சத்தில் இருக்கும்போதே ஓய்வு பெறுவது நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் எனவும் தெரிவித்தார்.
போல்ட் வென்ற தங்கங்கள்:
ஒலிம்பிக் போட்டியில் போல்ட் இதுவரை 6 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 2008ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 100 மீ, 200 மீ, 4*100 தொடர் ஓட்டம் ஆகியவற்றிலும், 2012 லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 100மீ, 200 மீ, 4*100 தொடர் ஓட்டம் ஆகியவற்றிலும் தங்கம் வென்றுள்ளார்.