நான் மகத்துவமானவன், என்னை விட சிறந்தவர் வேறு யாருமே இல்லை. என்னால் தான் இந்த உலகமே சிறப்புப் பெறுகிறது. நம்மால் தான் நம்மைச் சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும் என்று உங்களை நீங்கள் முதலில் நேசிக்க வேண்டும்.
எவர் ஒருவர் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி என்னடா வாழ்க்கை என்று புலம்புவாரோ, அவரால் அவரை நேசிக்க இயலாது, நோயினால் வாடுபவர்கள், அவர்களை நொந்து கொள்ளவே செய்வார்கள்.
எனவே, எவரது மனமும், உடலும் சீராக இருக்கிறதோ அப்போதுதான் அவர் தன்னைத் தானே நேசிக்க முடியும். அவ்வாறு உடலையும், மனதையும் சீராக வைத்துக் கொள்ள ஒரே ஒரு விஷயத்தை செய்தால் போதும் என்றால் அது யோகா தான்.
உங்களால் மற்றவர்களை ஆனந்தமாக வைத்துக் கொள்ள முடியும் என்றால், ஏன் உங்களை நீங்களே ஆனந்தமாக வைத்துக் கொள்ள முடியாது? உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், உங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் மனது எதற்காக ஏங்குகிறது, உங்கள் உடலின் தன்மை எத்தகையது, உங்களின் தேவை என்ன, ஆனால் நீங்கள் தற்போது செய்து கொண்டிருப்பது என்ன என்பதை சுய பரிசோதனை செய்ய வேண்டும்.
சுய பரிசோதனை செய்வதில் யோகா முக்கியப் பங்காற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய எண்ணம், செயல், பேச்சு ஆகியவை உண்மையாகவும், நல்லபடியாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம். அப்படி நாம் இருக்கிறோமா என்பதை யோகாவின் மூலம் அறியலாம்.
நமது எண்ணத்தையும், செயலையும், பேச்சையும் தூய்மையானதாக மாற்றவும் யோகா உதவுகிறது. யோகா செய்யும் போது ஒருவரது உடலில் உள்ள தீயவைகள் மறைந்து நன்மைகள் ஏற்படுகிறது. சுறுசுறுப்பு தோன்றுகிறது. சுறுசுறுப்பாக இருக்கும் மனிதன் எந்த செயலையும் எளிதாக செய்ய முடியும். தேவையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடத் தேவையில்லை.
தனது காரியங்களை செய்து முடித்துவிட்டால் பொய்யோ, புரட்டோ சொல்லத் தேவையில்லை. தெளிவான, உண்மையான பேச்சினை பேச முடியும். தன் மீது எந்த தவறும் இல்லாத நிலையில், தவறான எண்ணங்கள் மனதில் தோன்றாது. எனவே, யோகாவின் மூலம் நமது மனமும், உடலும் நிச்சயம் சீராக இருக்கும்.
ஆரோக்கியமாகவும், ஆனந்தமாகவும் வாழும் மனிதன் தன்னைத் தானே நேசிக்காமல் இருக்க முடியுமா என்ன?



07:20
ram

Posted in: