உயிர்காக்கும் புனிதத் தொழிலாக கருதப் படும் மருத்துவத்தில் சிறப்புப் பிரிவுகளில் சேருவதற்கு புத்திசாலித்தனமும், நல்ல கல்வியறிவும் மட்டும் போதாது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டுமானால் பணம் ஒரு முக்கியக் காரணியாக தற்காலத்தில் விளங்குகின்றது.
முதுநிலை பட்டப்படிப்பு பிரிவுகளில் அதிகப் பணம் அளிக்க முன்வருவோருக்கே அனுமதி என்ற நிலையே பரவலாகக் காணப்படுகின்றது.அதிலும் ஒரு மருத்துவக் கல்லூரியின் அரங்கத்தில் நிர்வாகக் குழுவினருடன் அமர்ந்திருக்கும் பெற்றோர்கள் கூட்டத்தில் அதிக விலை கொடுப்பவருக்கே அவர் விரும்பும் பிரிவில் அனுமதி கிடைக்கின்றது என்ற தகவல் வெளியாகியுள்ளது..
சென்னையில் சிறந்து விளங்கும் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் ரேடியாலஜி பிரிவில் முதுநிலைப் படிப்பிற்கான அனுமதி 4 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே பிரிவு பெங்களூரு மருத்துவக் கல்லூரிகளில் 3 அல்லது 3.5 கோடிக்கு கிடைக்கின்றது. எலும்பு மற்றும் தோல் மருத்துவத்திற்கான உயர்கல்வி அனுமதி ஒன்றிலிருந்து ஒன்றரை கோடியாக இருக்கின்றது. குழந்தை மருத்துவத்திற்கான அனுமதி 1.6 கோடிக்கு கிடைக்கின்றது.
ஒரு மருத்துவக் கல்லூரியின் அரங்கத்தில் நிர்வாகக் குழுவினருடன் அமர்ந்திருக்கும் பெற்றோர்கள் கூட்டத்தில் அதிக விலை கொடுப்பவருக்கே அவர் விரும்பும் பிரிவில் அனுமதி கிடைக்கின்றது. இத்தகைய முறை பெற்றோர்களுக்குமே திருப்தி அளிக்கவில்லை. இதுபோல் ஏல முறையில் அனுமதி கிடைப்பது சொத்துகளை வாங்குவதுபோல் இருக்கின்றது. அதுபோல் பணம் கொடுக்க இயலாத பெற்றோர்களின் பிள்ளைகளே எதிர்காலத்தில் பாதிக்கப்படுகின்றனர் என்று அவர்கள் கருதுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் ரேடியாலஜி பிரிவிற்கு விண்ணப்பிக்கும் போது மொத்தம் 683 சீட்டுகளே அந்தப் பிரிவில் உள்ளன. மாணவர்களின் தேவை மற்றும் விநியோகத்திற்கு இடையே பெரும் இடைவெளி இருக்கின்றது. இந்தப் பற்றாக்குறை செலவினத்தை அதிகரிக்கின்றது என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகின்றது.
இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் முதுநிலைப் படிப்பிற்கான இடங்களை அதிகரிக்கும்படி தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தும் பயனில்லை என்று கல்லூரி தரப்பு நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன. மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும்போது நிர்வாக செலவு அதிகரிப்பதால் அதனை ஈடுகட்ட அனுமதிக் கட்டணம் அதிகரிக்கின்றது என்பது அவர்கள் தரப்பு கருத்தாகும்.