.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label இயற்கை!. Show all posts
Showing posts with label இயற்கை!. Show all posts

Wednesday, 6 November 2013

விடியல்.. கவிதை!!


நிலவின் குளிர் தாங்கா அலையொன்று

மீனாக உருமாறித் தாவிக் குதிக்கிறது

மேகக் கூட்டுக்குள்

சலனம் கலைக்கப்பட்ட கோபத்தில்

தகிக்கத் தொடங்குகிறது

சூரியப்பறவை

Thursday, 31 October 2013

மழை மழையாகவே இருந்தது!

பிறிதொரு நாளில்
 
கன்னத்து லிப்ஸ்டிக் முத்தம்
 
அழிக்க முயற்சித்தது
 
மழை

பிறிதொரு நாளில்
 
கண்களின் நீர்த்தாரைகளை
 
மறைத்துக் கொண்டோடியது
 
மழை

பிறிதொரு நாளில்
 
நிகழ்ந்த பிரிவின்
 
உருவை ஈரமாக்கியது
 
மழை

பிறிதொரு நாளில்தான்
 
மழை மழையாகவே
 
இருந்தது

நீ என்னோடு மார்பணைந்து
 
நனைந்திருந்த அன்று
 
*********************************

ந ள் ளி ர வு ம ழை!

எச்சில் காய்ந்திடாத முத்தத்தின்
 
ஈரமாய்
 
உறக்கத்தின் ஆழ்நிலையில் ஊட்டிய‌
 
உணவாய்
 
புணர்தலின் முடிவிலான இயக்கத்தின்
 
நனைதலாய்
 
தூரலிட்டுப் போயிருக்கிறது
 

 
ள்
 
ளி
 

 
வு
 

 
 ழை
*********************************

பென்சில் நதி!

பென்சில் நதி

நதி பற்றிய கவிதையை
 
நான் எழுதியபோது
 
அருகில் வந்த மகள்
 
வரைந்த நதியைக் காட்டினாள்
 
தாளில் ஓடியது
 
பென்சில் நதி
 
என் கவிதையை
 
அதில் கரைத்துவிட்டு
 
மறுபடி பார்க்க
 
இன்னும் முடியவில்லை
 
எனச் சொல்லியபடியே
 
ஓடிய அவள்
 
கண்களில் மீதி நதி
 
*****************

மழைக்குறிப்புகள்!

மழைக்குறிப்புகள்

 
> வீட்டு முற்றத்தில்
 
> தேங்கிய மழைநீரில்
 
> விளையாட
 
> கத்திக்கப்பல் செய்து தாவென
 
> ந‌ச்ச‌ரிக்கிறாள் ம‌து
 
 > பழசின் அதிர்வுக‌‌ள் உறுத்த
 
> வேண்டும‌ட்டும் செய்துத‌ருகிறேன்
 
> தெறித்த ம‌ழையின்துளிக்கு
 
> மூழ்கிய க‌ப்ப‌லின் சோக‌ம் அழுத்த
 
> வீரிட்டு அழுகிறாள்
 
> தேற்ற வ‌ழியின்றி த‌விக்குமென் நினைவுக‌ளில்
 
> உடைகிறது ஒரு
 
> சிறு குமிழி

வனம்!

ஆறு மாதத்திற்குப் பின்
இங்கே வந்திருக்கிறேன்
தியானத்திற்காய் …..
உதிர்ந்த இலைகள்
பொலிவிழந்த மரங்கள்
ஹோ …..
என் தியானம்
எப்படிக் கழியும் அமைதியுடன் .

*****

வனாந்திரத்தில்
உதிர்ந்த பூக்களை
மிதித்தபடி
மரத்திலிருக்கும் பூக்களை
ரசித்துக் கொண்டிருக்காதே .
அதனதன் இயல்பிலிருக்கின்றன
பூக்கள் .

*****

வனத்தில் அமர்ந்து
சிறிது நெருப்பைப் பற்ற வைத்தேன் .
மரங்கள் அவற்றை
தன் அருகிலிருக்கும் துணைமரங்களுக்கு
கைமாற்றி விட்டுக் கொண்டிருந்தன .

இயற்கை!

தொடர்ந்து
 
இயற்கையை அவதானித்துக்
 
கொண்டிருந்தேன்….
 
………தொடர்ந்து..
 
வயதாகி விட்டது .
 
என் மகனிடம் கையளித்துவிட்டு
 
செல்கிறேன் .
 
மரங்களும்
 
 தன் பங்கிற்கு
 
கிளை மரங்களை எழுப்பியிருக்கின்றன .

** விதைகள் **


கைகட்டிய சேவகனாய்

பவ்யமாய் உள்நுழைந்தது

பனி விலக்கிய ஒரு மதியப்பொழுது

விலகலின் திசை நேரெதிரென
 
அறியப்பட்டிருக்கவில்லை அப்போது

இரை விழுங்கி சுருண்டிருக்கும்
 
சர்ப்பமதின் செரித்தல் நிகழ்வென
 
மெதுவாய் நடந்தேறியது
 
வன்மத்தின் வாக்குவாதம்

தென்றலின் தீண்டலை மறுத்துரைத்து
 
உஷ்ணக்காற்றாய் முகம் கிழித்தது
 
முள் தடித்த சொற்கள்

எங்கோ பெய்யும் மழையின் 

ம‌ண்வாசனையிலும்
 
அறுந்து விழும் நூலாம்படையிலும்
 
கருக்கொண்டுவிடும் இன்னமும்
 
விஷச்செடியின் வீரிய‌விதைகளென

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top