சென்னையில் எந்த ஏரியாவில் பார்த்தாலும் கட்டுமான பணிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. வீடு, கடைகள், வணிக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனைகள் என புதிய புதிய கட்டிடங்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. இவ்வாறு கட்டுமான பணி நடைபெறும் இடங்கள் சுகாதாரமாக இருப்பதில்லை.
சாலையில் கழிவுநீர் தேங்குதல், தேவையற்ற டயர், பைப் உள்ளிட்ட உபகரணங்களை சாலையிலேயே போட்டு வைப்பது, கட்டுமான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பது என கட்டுமானப்பணி நடக்கும் இடங்களால் சுற்றுப்புறப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குறிப்பாக, கொசு உற்பத்தி அதிகரிக்கிறது. கொசுக்களால் மலேரியா, சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்களுக்கு மக்கள் ஆளாகின்றனர்.
இதனால், சுகாதாரமற்ற முறையில் கட்டுமான பணி மேற்கொள்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அறிவித்தது. கட்டுமானப்பணி நடக்கும் இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு, கொசுக்களை உற்பத்தி செய்யும் வகையில் பணியிடத்தை மோசமாக வைத்திருக்கிறார்களா என சோதனை செய்தனர். சுகாதாரமற்ற வகையில் பணியிடத்தை வைத்திருந்தவர்களிடமிருந்து இதுவரை ரூ.6 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
‘கட்டிடத்தின் அளவுக்கு ஏற்றாற் போல் அபராதம் மாறுபடும். குறைந்தபட்சம் ரூ.60,000லிருந்து ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இதுவரை 1,600 கட்டுமான பணியிடங்கள் சுகாதாரமற்ற முறையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு கழக உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். மாநகராட்சி விதிப்படி, அனைத்து கட்டுமான இடங்களும் இருக்க வேண்டுமென அவர்களிடம் வலியுறுத்த உள்ளோம். மாநகராட்சியின் இந்த சோதனை தொடரும்’ என்கின்றனர் அதிகாரிகள்.உங்கள் ஏரியாவில், கட்டுமான பணி நடக்கும் இடம் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் இருந்தால் மாநகராட்சியின் இலவச புகார் எண் 1913க்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுக்கலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.