சைக்கிள் ரேஸ் பிரியர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தி... சென்னையில் முதல் முறையாக சைக்கிள் ரேஸ் உள்விளையாட்டரங்கம் கட்டப்பட உள்ளது. இந்த விளையாட்டரங்கத்துக்கான இடம் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளது.நகரின் மையப்பகுதியில் இந்த விளையாட்டு அரங்கம் அமைய வேண்டுமென்பதற்காக செனாய் நகர் திருவிக பூங்கா அருகே ஒரு இடத்தை தேர்வு செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்டிஏடி) கோரிக்கை வைத்தது.
இந்த இடத்தையும், வண்டலூரில் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்தையும் மாநகராட்சி ஆய்வு செய்தது.
இறுதியில், வண்டலூரில் சைக்கிள் ரேஸ் உள்விளையாட்டரங்கம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
செனாய் நகரில் நிலத்தின் மதிப்பு மிக அதிகமாக உள்ளது. அந்த இடத்தை வருவாய் அதிகமாக கிடைக்கும் வேறு பணிக்கு பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளோம். அதனால், சைக்கிள் ரேஸ் உள்விளையாட்டரங்கை வண்டலூரில் அமைக்க முடிவு செய்துள்ளோம்.
இதன் திட்ட மதிப்பீடு ரூ.8 கோடி. கட்டுமானப்பணிகள் அடுத்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கும். சுமார் ஆறரை ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள இந்த அரங்கில் வீரர், வீராங்கனைகள் பயிற்சி செய்ய தனி தளம், போட்டிகள் நடத்துவதற்கான தளம் என சர்வதேச தரத்தில் அமைக்கப்பட உள்ளது. பணிகள் தொடங்கி ஓராண்டில் நிறைவு பெறும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.