.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 15 October 2013

ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் அருளும் சனீஸ்வரர்!

                                      

நம் வாழ்க்கையில் ஆன்மிகமும், ஜோதிடமும் பின்னிப் பிணைந்தே இருக்கின்றன. இவை இரண்டையும் இரு கண்கள் என்றே கூறலாம். ஜோதிட சாஸ்திரத்தின்படி வரும் நாள், நட்சத்திர, திதிகளை அனுசரித்தே ஒவ்வொரு விஷயமும், விசேஷமும் மேற்கொள்ளப்படுகின்றன. நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் நவகிரகங்களின் அனுக்கிரகமே முக்கியமாக இருக்கிறது. நவகிரகங்களில் பிரசித்தி பெற்றதும், பிரதானமாக இருப்பதும் சனியாகும். இவர் ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யத்தை தருபவராக திகழ்கிறார்.


ஜோதிட சாஸ்திரத்தில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனீஸ்வரர்தான். இவர் நியாயவான், தர்மவான், நீதிமான் என போற்றப்படுகிறார். ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், மந்திரி, தொழிலதிபர், அன்றாடங்காய்ச்சி என எல்லோரும் இவருக்கு சமமானவர்களே. அவரவர் பூர்வ ஜென்ம கர்ம வினைக்கு ஏற்ப சிறிதும் பாரபட்சம் இன்றி பலாபலன்களை அருள்கிறார் கடவுளர்களை கூட இவர் விட்டு வைக்கவில்லை. நல்ல ஆரோக்யத்துடனும், செல்வச் செழிப்புடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ வேண்டும் என்பது எல்லோருக்கும் ஆசை.


இந்த மூன்றையும் அருள்பவர் சனீஸ்வர பகவான். தடைகளை அகற்றி வளமான வாழ்வை அளிப்பவர். நீண்ட ஆயுள், உயர்ந்த பதவி, நிறைந்த சொத்து, ஆள்பலம் ஆகிய அனைத்து செல்வங்களையும் தரக்கூடியவர். பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானைச் சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. சர்வ முட்டாளைகூட மிகப்பெரிய பட்டம் பதவி என்று அமர வைத்துவிடுவார். அதே நேரத்தில் அதிபுத்திசாலி, பெரிய ராஜ தந்திரியைக்கூட தெருவில் தூக்கி வீசிவிடுவார். இவர் 12 ராசிகளை சுற்றி வர சுமார் 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார்.


இந்த 30 ஆண்டுகளில் பல்வேறு விதமான மாற்றங்களை ஒரு ஜாதகருக்கு ஏற்படுத்துகிறார். ஆகையால்தான் 30 ஆண்டுகள் வாழ்ந்தவன் இல்லை, 30 ஆண்டுகள் தாழ்ந்தவன் இல்லை என்ற ஜோதிட வாக்கு ஏற்பட்டது. பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த ஒரே கிரகம் சனியாகும். ஒருவருக்கு ஜாதகத்தில் தசா புக்தி சரியில்லாமலும், சனி பார்வை சரி இல்லாமலும் இருந்து கெட்ட நேரம் வந்துவிட்டால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி என்ன நடக்கிறது என்று அவர் யூகிக்கும் முன்பே எல்லாம் நடந்து முடிந்து இருக்கும்.


அதே நேரத்தில் சனியால் யோக பலன்களை அனுபவிக்க வேண்டும் என்று ஜாதகத்தில் இருந்தால் அவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றலும் அவருக்கு உண்டு. ஆகையால்தான் "சனியைப்போல் கொடுப்பவனும் இல்லை, சனியைப்போல் கெடுப்பவனும் இல்லை," "சனி கொடுத்தால் அதை யார் தடுப்பார்" என்ற ஜோதிட சொற்றொடர்களும் ஏற்பட்டன.


சாக்கடையில் பதுங்கிய இந்திரன்


ஒருசமயம் தேவேந்திரன், சனி பகவானிடம் சென்று நான் தேவர்களுக் கெல்லாம் தலைவன். என்னை நீ எப்படி பிடிக்கலாம் என்று கேட்டார். அதற்கு சனிபகவான் ‘‘நான் நீதிமான், எல்லோரையும் சமமாக பாவித்துத்தான் கிரக பரிபாலனம் செய்து வருகிறேன். என் பார்வையில் இருந்து எவரும் தப்ப முடியாது,’’ என விளக்கம் தந்தார். ‘‘அப்படியென்றால் நீ என்னை பிடிக்கும் நேரத்தையாவது சொல்லி விடு,’’ என்று தேவேந்திரன் வேண்டினான். சனீஸ்வரரும் அந்த காலத்தை தெரிவித்தார்.


சனீஸ்வரர் குறிப்பிட்ட அந்த நேரம் வந்ததும் தேவேந்திரன் பெருச்சாளி உருக்கொண்டு சாக்கடையில் போய் ஒளிந்துகொண்டார். சனி குறிப்பிட்ட கால நேரம் கடந்தபிறகு சாக்கடையில் இருந்து வெளியே வந்த தேவேந்திரன் சனீஸ்வரரிடம் சென்று "உங்கள் பார்வையிலிருந்து தப்பி விட்டேன் பார்த்தீர்களா?" என்று பெருமையடித்துக் கொண்டார். அதற்கு சனீஸ்வரர் சிரித்துக்கொண்டே, "நீங்கள் சிம்மாசனத்தை விட்டு, சாக்கடையில் சென்று உழன்றீர்களே அதுகூட என் பார்வை  பீடிப்பினால்தான்" என்றார். இதன்மூலம் சனீஸ்வரர் ஓர் சமத்துவ நாயகன் என்பதை அறிய முடிகிறது.


சனியின் கோச்சார பலன்


எல்லா கிரகங்களுக்கும் ஜாதகத்தில் தசா, புக்தி, அந்தரம் என்று உண்டு. கோச்சார கிரக பெயர்ச்சியும் உண்டு. ஆனால், சனிக்கு கோச்சார கிரக பெயர்ச்சி பலம் அதிகம். காரணம் இவர் ஒரு ராசியில் சுமார் இண்டரை வருடங்கள் தங்கி இருந்து பலன் தருவார். ஒரு ஜாதகத்தில் 12, 1, 2 ஆகிய வீடுகளில் சனிபகவான் வந்து செல்லும்போது ஏழரைச் சனி என்ற அமைப்பை ஏற்படுத்துகிறார். அதேபோல் ராசிக்கு சுகஸ்தானமான நான்காம் வீட்டிற்கு வரும்போது அர்த்தாஷ்டம சனியாக பலன் தருகிறார். ராசிக்கு ஏழாம் வீட்டில் வரும்போது கண்ட சனியாகவும், எட்டாம் வீட்டிற்கு வரும்போது அஷ்டம சனியாகவும் பலன்களை தருகிறார்.


நமக்கு குடும்பத்தில் கஷ்ட, நஷ்டங்கள், உடல்நலக் குறைவு, விபத்துகள், வியாபாரத்தில், தொழிலில் கடன், நஷ்டம், ஏற்பட்டாலும் அலுவலகத்தில் ஏதாவது பிரச்னை, இடமாற்றம் போன்றவை நடந்தாலும், வீட்டில் பிள்ளைகள் சொல் பேச்சு கேட்காமல், படிக்காமல் விஷமத்தனங்கள் செய்தாலும், "உன்னை ஏழரை சனி பிடித்து ஆட்டுகிறது" என்று சொல்லி திட்டுவார்கள். மாறாக உன்னை சூரியன் பிடித்து ஆட்டுகிறான். உனக்கு கேது பிடித்து இருக்கிறது என்று யாரும் சொல்வதில்லை. ஜாதகத்தில் எந்த கிரக தசாபுக்தி மூலம் ஒருவருக்கு கெடுதல் வந்தாலும் சனீஸ்வரரின் தலைதான் உருளும். இதில் சிறிதளவும் உண்மை கிடையாது. எல்லா கிரகங்களுக்கும் நன்மை, தீமை, யோகம், அதிர்ஷ்டம், கஷ்ட-நஷ்டங்களைத் தருகின்ற தன்மை, அதிகாரம் எல்லாம் உண்டு. ஆனால், சனி மட்டுமே கெடுபலன்கள் தருவார் என்ற எண்ணம் பொதுவாக பரவலாக நம்மிடையே தவறாக ஏற்பட்டு
விட்டது.


ஏழரைச் சனியில் சுபம்


சனி, தசா காலத்திலோ, சனியின் கோச்சார நிலையிலோ, பல்வேறு விதமான யோகங்களை வாரி வழங்குவார். சனியால் வருகின்ற ஏற்றம், யோகம், அசுர வளர்ச்சியாகும். அரசியலில் மிகப்பெரிய பதவிகளையும், பொறுப்புக்களையும் கொடுப்பதில் சனிக்கு நிகர் சனியே. ஏழரைச்  சனியில் விரைய சனி நடைபெறும் காலத்தில் சொத்து வாங்கும் யோகத்தை தருவார். அதேபோல் மகன், மகள் திருமணத்தை சுபமாக நடத்திக் கொடுப்பார். வராத பணம் கடன்கள் எல்லாம் வசூலாகும். கூடவே சில அநாவசிய செலவுகளும் இருக்கும்.


நான்கில் சனி வரும்போது அலைச்சல், இடமாற்றம், சுக குறைவு இருந்தாலும் பூர்வீக சொத்துகளை அடைவதில் ஏற்பட்ட தடைகளை நிவர்த்தி செய்வார். விரும்பிய இடமாற்றம் உண்டாகும். சொந்த வீட்டில் பால் காய்ச்சும் பாக்யம் கிடைக்கும். அவரவர் கொடுப்பனைக்கேற்ப வாகன யோகத்தை தருவார். எட்டாம் இடமான அஷ்டமத்தில் சனி வரும்போது செலவுகள் கூடும் என்றாலும் அது கூடுமானவரை அவசிய, சுப செலவுகளாகவே இருக்கும். அதேசமயம் மருத்துவச் செலவுகளும் இருக்கும். குடும்ப சொத்துகள், பாகப்பிரிவினை சுபமாக நடக்கும். சாதக, பாதகங்கள், நிறை, குறைகள் இணைந்ததுதான் கிரக பலன்களாகும்.


ஜெனன லக்னத்திற்கு இரண்டாம் இடமான தனம், வாக்குஸ்தானத்தில் சனி இருந்தால் அவரை 'கரிநாக்கு' என்று சொல்வார்கள். இவர்கள் வாயில் இருந்து வரும் வார்த்தைகளுக்கு சக்தி அதிகம். இவர்களுக்கு வாக்கு பலிதம் இருக்கும். அதேநேரத்தில் கையில் காசு, பணம் தங்காது. கையில் இருந்தால் செலவு ஆகிக்கொண்டே இருக்கும். பெரும்பாலும் குடும்பத்தை விட்டு பிரிந்து அயல் நாடுகளுக்குச் சென்று பணம் சம்பாதிப்பார்கள்.
ஜாதக கட்டத்தில் சனிக்கும், சந்திரனுக்கும் உள்ள தொடர்பால் புனர்பூ தோஷம் ஏற்படுகிறது.


ஒரே ராசியில் சனி-சந்திரன் இருப்பது சமசப்தமமாக பார்ப்பது. சனி நட்சத்திரத்தில் சந்திரன், சந்திரன் நட்சத்திரத்தில் சனி இருப்பது இந்த புனர்பூ தோஷ அமைப்பாகும். இந்த அமைப்பு உள்ளவர்களுக்கு முயற்சி செய்யாமலேயே திடீரென்று திருமணம் கூடி வந்துவிடும். மளமளவென்று எல்லா ஏற்பாடுகளும் தாமாகவே நடக்கும். இது ஒருவகை. இன்னொரு வகை எத்தனை முயற்சிகள் செய்தாலும் ஏதாவது தடை வரும். நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரை நிச்சயமற்ற சூழ்நிலைகள் உண்டாகும். சிலருக்கு திருமண தேதிகூட மாறலாம்.


வழிபாடு - பரிகாரம்


மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், முதியோர்கள், ஆதரவற்றோர், கடின உழைப்பாளிகள், தொழிலாளிகள், பாரம் சுமப்போர், துப்புரவுத் தொழிலாளிகள், தொழு நோயாளிகள் போன்றவர்களுக்கு செய்யும் தொண்டும், உதவியும், சனீஸ்வரருக்கு மிகவும் பிரீதியானதாகும். சனி ஸ்தலமான திருநள்ளாறு சென்று வழிபட்டு அன்னதானம் செய்யலாம். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நவதிருப்பதிகளில் பெருங்குளம் சனி பரிகார ஸ்தலமாகும். சனிக்கிழமை  வரும் பிரதோஷ  தினத்தில் சிவனுக்கு வில்வத் தளங்களால் மாலை சாற்றி வழிபடலாம். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு நல்லெண்ணெய் தீபம் எற்றி, 8 சிதறு தேங்காய் உடைத்து வழிபடலாம். ஏழைகளுக்கு குறிப்பாக வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு நல்லெண்ணெய் தானம் தரலாம். இல்லாதோர், இயலாதோர் மற்றும் சாலையோரம் வசிப்பவர்களுக்கு இரும்பு சட்டி வாங்கித் தரலாம். சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி நாட்களில் அன்னதானம், வஸ்திர தானம் செய்வது சிறப்பு.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top