ராஜமௌலி இயக்கி வரும் தெலுங்கு படத்திற்கு தமிழில் ‘மகாபலி’ என்று பெயர் வைத்துள்ளனர்.
நான் ஈ பட இயக்குனர் ராஜமௌலி அடுத்து பாஹுபாலி தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார். சரித்திர பின்னணியிலான இப்படத்தில் அனுஷ்கா ராணி வேடம் ஏற்றிருக்கிறார். ‘ரிபெல் ஸ்டார்’ பிரபாஸ்தான் கதையின் நாயகன்.
இவர்களுடன் சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் மற்றும் தெலுங்கின் முன்னணி நடிகர் - நடிகைகள் பலர் நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெறுகிறது. தெலுங்கு திரையுலகில் இதுவரை இல்லாத அளவிற்கு பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.
இந்நிலையில் படத்தின் ‘மேக்கிங்’ சம்பந்தமான வீடியோ ஒன்றை, கதாநாயகன் பிரபாஸின் பிறந்த நாளையொட்டி வெளியிட்டுள்ளனர். தெலுங்கின் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவரான எம்.எம்.கீரவாணி இசை அமைக்க, கே.கே.செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். படத்திற்கு சாபு சிரில் கலை இயக்குனராக பணியாற்ற, பீட்டர் ஹெய்ன் சண்டை காட்சிகளை அமைக்கிறார். ஸ்ரீகர் பிரகாஷ் எடிட்டிங் செய்யும் இந்தப் படத்தின் கிராஃபிக்ஸ் வேலைகளை ஹாலிவுட் கலைஞர்கள் கவனிக்கிறார்கள்.
ராஜமெளலி இயக்கிவரும் 'பாஹுபாலி' திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவரவிருக்கிறது. 'ரத்த சரித்திரா' படத்தினைத் போன்று ஒரே சமயத்தில் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பையும் இப்போதே முடித்துவிட முனைப்புடன் செயல்படுகிறாராம் ராஜமெளலி. இந்தப் படத்திற்கு தெலுங்கில் ‘பாஹுபாலி’ என்றும் தமிழில் ‘மகாபலி’ என்றும் பெயர் வைத்துள்ளார்.